Friday, 10 April 2020

கடவுள்

வெளியில் தேடும் இறைவன்
உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ
ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய்
ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உணர்வாயோ
தியானம் செய்யும் நீ தியாகத்தால் இறைவன்
மகிழ்கின்றான் என்பதை அறிவாயோ
பாவங்கள் செய்தே பழக்கப்பட்ட நீ
பரிசுத்த இறைவனை அறிவதுதான் என்றோ

மாயை

உடல் என்னும் மாயைக்குள் ஒளிந்திருக்கிறான்
உயிர் எனும் பரம்பொருள்
அவன் கண்களுக்கு தெரியாதவன்
உடலை இயக்குகின்றான்
அவன் வம்புக்கு செல்லாதவன்
உடலின் வாயிலாக வம்பும் தும்பும் விலைக்கு வாங்குகிறான்
அவன் உள்ளாங்களின் உண்மைகளை நங்கு அறிந்தவன்
அவன் கடவுளின் வடிவானவன்
மாயை உடலுக்குள் அடைபட்டவன்

Saturday, 25 January 2020

மனிதா!மனிதா!

மண்ணுக்கு ஆசைப்படும் மனிதா
இந்த மண்த்தானே உன் உடலை தின்னப்போகிறது
இந்த மண்த்தானே உன் உடலை அழிக்கப்போகிறது
அதற்குள் ஏன் இந்த அவசரம்
பணத்திற்கு ஆசைப்படும் மனிதா
இந்த பணம்தான் உன் நிம்மதியை கெடுக்கப்போகிறது
இந்த பணம்தானே உனக்கு அழிவையும் கொடுக்கப்போகின்றது விலையைக் கொடுத்து வினையை ஏன் வாங்கிக்கொள்கிறாய்
தேவையை உணர்ந்து செயல்படு தேவைக்கு அதிகமானால் துன்பப்படு


Wednesday, 1 January 2020

இனிய புத்தாண்டு


கொள்கையை பற்றிடுவோம்
குறிக்கோளினை அடைந்திடுவோம்
புத்துணர்சி பெற்றிடுவோம்
புதுமையை தினம் படைத்திடுவோம்
இன்னலை வென்றிடுவோம்
இமயத்தையும் தொட்டிடுவோம்
உறவுகள் வளர்திடுவோம்
உன்மையை தினம் பேசிடுவோம்
நம்பிக்கை பெற்றிடுவோம்
நயவஞ்சகரை வீழ்த்திடுவோம்
அன்பை வளர்த்திடுவோம்
அதிசயத்தைக் காட்டிடுவோம்
சோம்பலை ஒழித்திடுவோம்
சுறுசுறுப்பை பெற்றிடுவோம்
துணிவை வளர்திடுவோம்
துக்கத்தை ஒதுக்கிடுவோம்
அச்சத்தை தவிர்த்திடுவோம்
அஞ்சமையை வளர்த்திடுவோம்
சான்றோரை மதித்திடுவோம்
சகலமும் பெற்றிடுவோம்
எதிலும் நேர்மை  கொள்வோம்
எப்போதும் கடமை செய்வோம்
இறைவனை போற்றிடுவோம்
இல்லாதோர்க்கு பகிர்ந்தளிப்போம்
இனிய புத்தாண்டை வரவேற்போம்
இனி இன்னல் மறந்து இனிமை காண்போம்




Monday, 30 December 2019

தத்துவங்கள்

செல்வம் உள்ளவனிடம்
கொடுக்க மனமிருக்காது
கொடுக்க மனமுள்ளவனிடம்
செல்வமிருக்காது
கருணை உள்ளவன் கடவுள்
கருனையற்றவன் மிருகம்
நீ கருணை கொண்டிருந்தால் உன்னையும்
கடவுளாக பார்க்கும் இந்த உலகம்

Saturday, 28 December 2019

விடியல்

விடியல்
நீலவானம்
பனி விழும் காலை
அதில் நிலவாய் தெரியும் சூரியன்
இளவெயிலில் நனைந்த பூக்கள்
எதையோ தேடி விரையும் மேகங்கள்
எங்கும் அழகின் சிரிப்பு

Friday, 30 December 2011

அண்ணி - சிறுகதை

வெண்ணிரமாகக் கொடியில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருந்த முல்லை மலர்களை பறித்துக் கூடையில் நிரப்பிக் கொண்டிருந்தாள் மைதிலி.கோயிலில் பூஜைக்கான மணியடிக்கும் சத்தம் கேட்டது.
மைதிலி பூக்கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். ஆறுமணிக்கு கணவன் ராகுல் வருவதற்குள் கோயிலுக்குப்போய் திரும்பிவிட வேண்டும். வீடு சன்னதித் தெருவில் இருந்தது வசதியாகப் போய்விட்டது. வேகமாக வாயிற்கதவைத் திறந்தவள் அப்படியே திகைத்து நின்றாள். வெளியில் ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டேண்ட் போட்டுக் கொண்டிருந்தான் பரத்.
அவள் கணவனுடைய தம்பி.
'போச்சுடா இன்னிக்கு கோயிலுக்குப் போன மாதிரிதான். நினைத்தபடி உள்ளே செல்ல முயன்றவளை கவனித்துவிட்ட பரத் வேகமாக உள்ளே வந்தான்.
"என்ன அண்ணி, எங்கேயோ கிளம்பின மாதிரி இருக்கு?"
"ஆமா கோயிலுக்குப் போலாம்னு.. " இழுத்தாள் மைதிலி.
உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது? அண்ணன் இல்லாம தனியா எங்கியும் போகாதிங்கன்னு?" சீறினான்.
மைதிலிக்கும் கோபம் பொத்துக் கொண்டது " இந்த நாலுவீடு தள்ளி இருக்குற கோயிலுக்குப் போய் வர்றதுக்குள்ள யாரும் என்ன தூக்கிக்கிட்டு போய்ட மாட்டாங்க"
அவ்ளோதான். போனவாரம் சென்னையில் நடந்த பேப்பரில் வந்த, வராத கொலை, வழிப்பறி சம்பவங்களைப பற்றியும் அதற்குக் காரணமாயிருந்த பெண்களின் அஜாக்கிரதை புத்தியையும் பற்றி அவன் ஒரு மணி நேரம் லக்சர் அடித்து முடிக்கவும் அவளுக்கு தலைவலி மண்டையைப் பிளக்கவும் சரியாக இருந்தது.
அட ஈஸ்வரா! ஒரு கோயிலுக்குப் போய் வரக்கூட எனக்கு சுதந்திரமில்லையா? மாமியாரில்லாத வீடு. வீட்டில் மைத்துனரும் மாமனாரும் மட்டும் தான்,என்பதற்காகவே ராகுல் அவளைவிட அழகில், நிறத்தில் மிகவும் சராசரி என்றாலும் சந்தோஷமாகத்தான் மணக்க சம்மதித்தாள். ஆனால் மாமியாரில்லாத குறையை மைத்துனன் பரத் பூர்த்திசெய்யவும் தவித்துப் போனாள்.எந்த வேலை செய்தாலும் அவனுக்கு திருப்தியே கிடையாது. அது அவன் சம்மத்தப்பட்ட வேலையாக இல்லாவிட்டாலும்கூட எதாவது குறை சொல்லாமல் அவனுக்குத் தூக்கம் வராது.
"என்ன அண்ணி, நீங்க இதுக்கு முன்ன வாஷிங் மெஷின் யூஸ் பண்ணினதில்லையா? சட்டைக் காலரில் அழுக்கு அப்படியே இருக்கு. இதைப் போட்டுக்கிட்டு எப்படி நா ஆபீஸ் போறது" என்றான் ஒருநாள்.

"அண்ணி, நீங்க பண்ண பிரைட்ரைஸ் சரியாவே வேகலை. ஆபீஸ்ல பிரண்ட்ஸ் முன்னாடி ரொம்ப அவமானமா போச்சு" என்றான் ஒருநாள்.
என்ன ஒரு மட்டம் தட்டும் வார்த்தைகள்!
இப்படி கல்யாணம் ஆன இந்த ஒரு மாதத்தில் அவன் குறை சொல்லாத விஷயமே கிடையாது.
மாமனார் அவனைக் கடிந்து கொள்ளத்தான் செய்தார். அவர் பேச்சை அவன் காதில் போட்டுக்கொண்டால் தானே?
இப்போதெல்லாம் அவளது சுதந்திரத்தில் அவன் தலையிடுவது அவளுக்குப் பிடிக்கவே இல்லை.
அன்றிரவு ராகுல் வந்ததும் கொட்டித் தீர்த்துவிட்டாள்.
"இதோ பாருங்க இனி இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது. உங்க தம்பி பெரிய ஹீரோவா இருந்தா அது அவரோட. எனக்கு அதப் பத்தி ஒண்ணும் கவலையில்லை.அவர் என்னை அதிகாரம் பண்றது எனக்குப் புடிக்கலை. நாம தனிக் குடித்தனம் போய்டலாம்" என்றாள்.
"மைதிலி அவன் எதோ சின்னப்பையன், அவன் பேசுறதை எல்லாம் மனசுல வச்சுக்காதே.உனக்கு கோயிலுக்குப் போகணும் அவ்ளோதானே? வா, நானே உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன்."
என்னமோ போங்க, உங்களுக்குப் போயி இப்படி ஒரு தம்பியா? சீ சீ , நீங்க எங்கே? அவரு எங்கே? ஆளு அழகாயிருந்தா மட்டும் போதுமா? இவரு கிட்ட எந்த பொண்ணு மாட்டிக்கிட்டு தவிக்கப் போறாளோ? ரொம்பப் பாவம்"என்று மைதிலி சலித்துக் கொண்டாள்.
"சரிம்மா, சீக்கிரம் கிளம்பு. கோயில் மூடிடப் போறாங்க" என்றான் ராகுல்
அவனது அன்புக்கு கட்டுப்பட்ட மைதிலி அந்தப் பேச்சை விட்டு அவனுடன் கோயிலுக்குக் கிளம்பினாள்.ஆனாலும் அவளுக்கு மனதில் உறுத்தலாகவே இருந்தது.
திரும்பி வீட்டுக்கு வரும்போது உள்ளே பேச்சுக்குரல் கேட்டு இருவரும் வெளியிலேயே நின்றனர்.
"என்ன இருந்தாலும் நீ அந்தப்பொண்ணை ரொம்ப ஓவரா டீஸ் பண்றே பரத். அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்? நீ ஏன் இப்படி நடந்துக்கறேன்னு எனக்குப் புரியவே இல்லை" மாமனாரின் குரல் ஓங்கி ஒலித்தது.
"அப்பா நா யார் மனசையும் புண்படுத்தமாட்டேன் இது உங்களுக்குத்தெரியாதா?அதுவும் ஒரு தாய் ஸ்தானத்தில் வீட்டுக்கு விளக்கேற்ற வந்திருக்கும் அண்ணியை நான் தெய்வமாகவே மதிக்கிறேன்." பரத்தின் குரல் மென்மையாக ஒலித்தது.
"அப்போ நீ நடந்துக்கிட்டதெல்லாம் வெறும் நடிப்பா?"
"ஆமாம்பா, அப்பா உங்களுக்குத் தெரியாததில்லை.அண்ணனைவிட நான் அழகு, திறமை எல்லாத்திலையும் அதிகம். சின்னவயசுல கூட எல்லோரும் என்னைத்தான் புகழுவாங்க. இது அண்ணன் மனசுல ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்திடிச்சி. அண்ணி வீட்டுலயும் கிட்டத்தட்ட இதுதான் நடந்தது. அண்ணன் எதிர்லயே எல்லோரும் என்னைப் பாராட்டிப்பேசுனாங்க. அது அண்ணி மனசுலயும் பதிந்து என்னப்பத்தி அவங்களும் அண்ணன்கிட்ட புகழ்ந்து பேசக்கூடாதுன்னுதான் நான் அவங்களுக்குப் பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டேன்.ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளுவான் ஆனால் தன மனைவி தன்னைவிட வேறோருவனைப் புகழ்ந்து பேசினால் தாங்க மாட்டான். இப்பெல்லாம் அண்ணிக்கு எம்மேல சரியான வெறுப்பு. எப்போ பாத்தாலும் அண்ணன் கிட்ட என்னப்பத்தி குறையாவும் அவரப் பத்தி உயர்வாவும் பேசறாங்க. அவுங்க ரண்டு பேரும் ஒற்றுமையா இருக்காங்க. எனக்கு அது போதும்" என்ற பரத்தை பெருமையாகப் பார்த்தார் தந்தை.
மைதிலியும் ராகுலும் மன நிறைவுடன் வீட்டுக்குள் நுழைந்தனர்.

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...