Friday 30 December 2011

அண்ணி - சிறுகதை

வெண்ணிரமாகக் கொடியில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருந்த முல்லை மலர்களை பறித்துக் கூடையில் நிரப்பிக் கொண்டிருந்தாள் மைதிலி.கோயிலில் பூஜைக்கான மணியடிக்கும் சத்தம் கேட்டது.
மைதிலி பூக்கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். ஆறுமணிக்கு கணவன் ராகுல் வருவதற்குள் கோயிலுக்குப்போய் திரும்பிவிட வேண்டும். வீடு சன்னதித் தெருவில் இருந்தது வசதியாகப் போய்விட்டது. வேகமாக வாயிற்கதவைத் திறந்தவள் அப்படியே திகைத்து நின்றாள். வெளியில் ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டேண்ட் போட்டுக் கொண்டிருந்தான் பரத்.
அவள் கணவனுடைய தம்பி.
'போச்சுடா இன்னிக்கு கோயிலுக்குப் போன மாதிரிதான். நினைத்தபடி உள்ளே செல்ல முயன்றவளை கவனித்துவிட்ட பரத் வேகமாக உள்ளே வந்தான்.
"என்ன அண்ணி, எங்கேயோ கிளம்பின மாதிரி இருக்கு?"
"ஆமா கோயிலுக்குப் போலாம்னு.. " இழுத்தாள் மைதிலி.
உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது? அண்ணன் இல்லாம தனியா எங்கியும் போகாதிங்கன்னு?" சீறினான்.
மைதிலிக்கும் கோபம் பொத்துக் கொண்டது " இந்த நாலுவீடு தள்ளி இருக்குற கோயிலுக்குப் போய் வர்றதுக்குள்ள யாரும் என்ன தூக்கிக்கிட்டு போய்ட மாட்டாங்க"
அவ்ளோதான். போனவாரம் சென்னையில் நடந்த பேப்பரில் வந்த, வராத கொலை, வழிப்பறி சம்பவங்களைப பற்றியும் அதற்குக் காரணமாயிருந்த பெண்களின் அஜாக்கிரதை புத்தியையும் பற்றி அவன் ஒரு மணி நேரம் லக்சர் அடித்து முடிக்கவும் அவளுக்கு தலைவலி மண்டையைப் பிளக்கவும் சரியாக இருந்தது.
அட ஈஸ்வரா! ஒரு கோயிலுக்குப் போய் வரக்கூட எனக்கு சுதந்திரமில்லையா? மாமியாரில்லாத வீடு. வீட்டில் மைத்துனரும் மாமனாரும் மட்டும் தான்,என்பதற்காகவே ராகுல் அவளைவிட அழகில், நிறத்தில் மிகவும் சராசரி என்றாலும் சந்தோஷமாகத்தான் மணக்க சம்மதித்தாள். ஆனால் மாமியாரில்லாத குறையை மைத்துனன் பரத் பூர்த்திசெய்யவும் தவித்துப் போனாள்.எந்த வேலை செய்தாலும் அவனுக்கு திருப்தியே கிடையாது. அது அவன் சம்மத்தப்பட்ட வேலையாக இல்லாவிட்டாலும்கூட எதாவது குறை சொல்லாமல் அவனுக்குத் தூக்கம் வராது.
"என்ன அண்ணி, நீங்க இதுக்கு முன்ன வாஷிங் மெஷின் யூஸ் பண்ணினதில்லையா? சட்டைக் காலரில் அழுக்கு அப்படியே இருக்கு. இதைப் போட்டுக்கிட்டு எப்படி நா ஆபீஸ் போறது" என்றான் ஒருநாள்.

"அண்ணி, நீங்க பண்ண பிரைட்ரைஸ் சரியாவே வேகலை. ஆபீஸ்ல பிரண்ட்ஸ் முன்னாடி ரொம்ப அவமானமா போச்சு" என்றான் ஒருநாள்.
என்ன ஒரு மட்டம் தட்டும் வார்த்தைகள்!
இப்படி கல்யாணம் ஆன இந்த ஒரு மாதத்தில் அவன் குறை சொல்லாத விஷயமே கிடையாது.
மாமனார் அவனைக் கடிந்து கொள்ளத்தான் செய்தார். அவர் பேச்சை அவன் காதில் போட்டுக்கொண்டால் தானே?
இப்போதெல்லாம் அவளது சுதந்திரத்தில் அவன் தலையிடுவது அவளுக்குப் பிடிக்கவே இல்லை.
அன்றிரவு ராகுல் வந்ததும் கொட்டித் தீர்த்துவிட்டாள்.
"இதோ பாருங்க இனி இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது. உங்க தம்பி பெரிய ஹீரோவா இருந்தா அது அவரோட. எனக்கு அதப் பத்தி ஒண்ணும் கவலையில்லை.அவர் என்னை அதிகாரம் பண்றது எனக்குப் புடிக்கலை. நாம தனிக் குடித்தனம் போய்டலாம்" என்றாள்.
"மைதிலி அவன் எதோ சின்னப்பையன், அவன் பேசுறதை எல்லாம் மனசுல வச்சுக்காதே.உனக்கு கோயிலுக்குப் போகணும் அவ்ளோதானே? வா, நானே உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன்."
என்னமோ போங்க, உங்களுக்குப் போயி இப்படி ஒரு தம்பியா? சீ சீ , நீங்க எங்கே? அவரு எங்கே? ஆளு அழகாயிருந்தா மட்டும் போதுமா? இவரு கிட்ட எந்த பொண்ணு மாட்டிக்கிட்டு தவிக்கப் போறாளோ? ரொம்பப் பாவம்"என்று மைதிலி சலித்துக் கொண்டாள்.
"சரிம்மா, சீக்கிரம் கிளம்பு. கோயில் மூடிடப் போறாங்க" என்றான் ராகுல்
அவனது அன்புக்கு கட்டுப்பட்ட மைதிலி அந்தப் பேச்சை விட்டு அவனுடன் கோயிலுக்குக் கிளம்பினாள்.ஆனாலும் அவளுக்கு மனதில் உறுத்தலாகவே இருந்தது.
திரும்பி வீட்டுக்கு வரும்போது உள்ளே பேச்சுக்குரல் கேட்டு இருவரும் வெளியிலேயே நின்றனர்.
"என்ன இருந்தாலும் நீ அந்தப்பொண்ணை ரொம்ப ஓவரா டீஸ் பண்றே பரத். அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்? நீ ஏன் இப்படி நடந்துக்கறேன்னு எனக்குப் புரியவே இல்லை" மாமனாரின் குரல் ஓங்கி ஒலித்தது.
"அப்பா நா யார் மனசையும் புண்படுத்தமாட்டேன் இது உங்களுக்குத்தெரியாதா?அதுவும் ஒரு தாய் ஸ்தானத்தில் வீட்டுக்கு விளக்கேற்ற வந்திருக்கும் அண்ணியை நான் தெய்வமாகவே மதிக்கிறேன்." பரத்தின் குரல் மென்மையாக ஒலித்தது.
"அப்போ நீ நடந்துக்கிட்டதெல்லாம் வெறும் நடிப்பா?"
"ஆமாம்பா, அப்பா உங்களுக்குத் தெரியாததில்லை.அண்ணனைவிட நான் அழகு, திறமை எல்லாத்திலையும் அதிகம். சின்னவயசுல கூட எல்லோரும் என்னைத்தான் புகழுவாங்க. இது அண்ணன் மனசுல ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்திடிச்சி. அண்ணி வீட்டுலயும் கிட்டத்தட்ட இதுதான் நடந்தது. அண்ணன் எதிர்லயே எல்லோரும் என்னைப் பாராட்டிப்பேசுனாங்க. அது அண்ணி மனசுலயும் பதிந்து என்னப்பத்தி அவங்களும் அண்ணன்கிட்ட புகழ்ந்து பேசக்கூடாதுன்னுதான் நான் அவங்களுக்குப் பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டேன்.ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளுவான் ஆனால் தன மனைவி தன்னைவிட வேறோருவனைப் புகழ்ந்து பேசினால் தாங்க மாட்டான். இப்பெல்லாம் அண்ணிக்கு எம்மேல சரியான வெறுப்பு. எப்போ பாத்தாலும் அண்ணன் கிட்ட என்னப்பத்தி குறையாவும் அவரப் பத்தி உயர்வாவும் பேசறாங்க. அவுங்க ரண்டு பேரும் ஒற்றுமையா இருக்காங்க. எனக்கு அது போதும்" என்ற பரத்தை பெருமையாகப் பார்த்தார் தந்தை.
மைதிலியும் ராகுலும் மன நிறைவுடன் வீட்டுக்குள் நுழைந்தனர்.

கல்மனசு - சிறுகதை

"தேவையானதை எல்லாம் கரெக்டா எடுத்து வச்சுக்கோம்மா, அப்புறம் அங்க போன பிறகு அது இல்லை இது இல்லன்னு சொல்லக்கூடாது". பேக் பண்ணிக் கொண்டிருந்த அம்மாவிடம் எச்சரித்துவிட்டு
"எங்கே இந்த மீனாவைக் காணோம்" என்றபடி உள்ளே நுழைந்தேன் நான்
"இங்கே தான் இருக்கேங்க" பூஜை அறையிலிருந்து தீனமாக குரல் கேட்டது.
"இன்னும் பூஜை முடியல்லியா? மதியம் ஒரு மணிக்கு அட்மிஷன். நீயானா இன்னும் பூஜையிலேயே உக்கார்ந்துக்கிட்டு இரு" கத்தினேன் நான்.
"என்னங்க ..எனக்கு ரொம்ப பயமா இருக்கு . சிசேரியன் ன்னா ரொம்ப வலிக்குமா?"குழந்தை போல் கேட்டுக்கொண்டு வந்தவளைக் கோபத்துடன் ஏறிட்டேன் நான்.
"ஊருல உலகத்துல யாருமே குழந்தையே பெத்துக்கறதில்லையா? என்னமோ நீதான் ரொம்ப அலட்டிகறே? ரண்டு நாளா இதே தொணதொணப்பு. தாங்கலைடா சாமி. இப்போ நீ ரெடியாகப் போறியா இல்லையா?" நான் போட்ட அதட்டலில் பயத்தை மறைத்தபடி தயாராகத் தொடங்கினாள் மீனா.
எனக்குமே உள்ளூர பயம்தான். இது தலைப் பிரசவம். மறுபிறவி என்பார்களே அதைப்போல. ஆனால் என் பயத்தை வெளியில் காட்டிக் கொண்டால் ஏற்கனவே பயந்து போயிருக்கும் அவள் இன்னும் பயந்துவிடுவாள் என்பதால் கோபம் போலவே நடித்துக் கொண்டிருக்கிறேன். அவள் உள்ளே சென்றதும் பூஜையறைக்குள் சென்று "பகவானே என் மீனாவை நல்லபடியாய் எனக்குத் திருப்பிக்கொடு" என்று வேண்டிக்கொண்டேன் அவளுக்குத் தெரியாமல்.
மருத்துவமனை.
மீனாவை ரெடிபண்ணி கொண்டிருந்தனர் செவிலியர்.
டாக்டரிடம் பேசிவிட்டு வந்தேன் நான்.
"என்னங்க டாக்டர் என்ன சொல்றாங்க?"
"எல்லாம் முன்னமே சொன்னதுதான். ஒருமணிக்கு சிசேரியன். ரண்டு மணிக்கெல்லாம் முடிஞ்சுடும், ஒண்ணும் பிரச்சனை இல்லை"
"என்னங்க மயக்கம் குடுத்து தானே செய்வாங்க. ஒருவேளை மயக்கம் தெளிஞ்சதும் வலிக்குமா?"
"இந்த மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தா நா நேரா வீட்டுக்குப் போய்டுவேன். நீ எப்படியாவது போ."
"ச்சே ..என்ன இருந்தாலும் கொஞ்சமாவது எம்மேல உங்களுக்கு பாசம் இருக்கா. சரியான கல்மனசு. "
"சரி சரி அப்படியே வச்சுக்கோ" நான் சொல்லி முடிப்பதற்குள் அவளது அம்மா மற்றும் உறவினர்கள் வந்துவிட அவர்களுடன் ஐக்கியமானாள்.
நான் எப்பவுமே இப்படித்தான். உலகிலேயே நான் அதிகம் நேசிப்பது அவளைத்தான் என்றாலும் காட்டிக்கொள்ளவே மாட்டேன்.எதையும் அவள் பத்து தடவைக் கேட்டால்தான் செய்வேன் . இதனால் நான் அவளை வெறுப்பதாகவே தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். இருக்கட்டும்.
டாக்டர் சில பேப்பர்களில் கையொப்பம் வாங்கினார். படிக்கும்போதே மனது வலித்தது. இந்த அறுவை சிகிச்சையில் எதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால்...?ஐயோ கடவுளே அப்படி எதுவும் நேர்ந்துவிடக் கூடாது.வேண்டியபடி வெளியில் நின்றிருந்தேன்.
"ஜீவா நீ போய் சாப்பிட்டு வந்துடு.இங்கே நான் பாத்துக்கறேன்". மாமனார் சொன்னது காதிலேயே விழவில்லை.
"ஜீவா காலைலேர்ந்து ஒண்ணுமே சாப்பிடலியே இந்த பாலையாவது குடியேன்" என்ற தாயின் வார்த்தைகளுக்கு தலையசைவால் மறுப்பு சொல்லிவிட்டு வாயிலையே வெறித்தபடி நின்றிருந்தேன்.
"மாமா , அரைமணி நேரம்னு சொன்னாங்க இப்போ முக்கால்மணி நேரம் ஆகுது? என்னன்னு தெரியலையே?"பதறினேன் அவர் சொன்ன மறுமொழிகூட காதில் விழவில்லை.
"இந்தாங்க ,மீனான்ற பேஷண்டோட அட்டெண்டர் யாரு"?
"நான்தான் என்னாச்சு டாக்டர்?"
"கொஞ்சம் சீரியசான கேஸ்தான் , குழந்தை பொசிஷன் மாறியிருக்கு. சிசேரியன்ல ஏதோ ஒரு உயிர்தான் பிழைக்க முடியம்."
டாக்டர் முடிப்பதற்குள் " டாக்டர் என் மீனாவை காப்பாத்துங்க ப்ளீஸ்” என்று கதறியபடி மயங்கிவிழுந்தேன் நான்.
எவ்வளோ நேரமானதோ தெரியவில்லை.
"ஜீவா ..இப்போ எப்படி இருக்கீங்க..." டாக்டரின் கேள்விக்கு புரியாமல் விழித்தபடி என்னாச்சு டாக்டர்? மீனா எங்கே" என்ற என் காதுகளில் இனிதாக குழந்தையின் அழுகுரல் கேட்டது.
பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்ற டாக்டர் "பாத்தீங்களா உங்களுக்கு பொண்ணு பெறந்திருக்கா. கடவுள் புண்ணியத்துல உங்க மீனாவுக்கும் ஆபத்தில்லை”.
டாக்டர் வெளியேறியபின்
"ஆமா எம் மேல இவ்வளோ பாசமா வச்சிருப்பீங்க? எனக்கு ஒரு ஆபத்துன்னா எனக்கு முன்னாடி நீங்க போய் சேந்துடுவீங்க போலருக்கு? அரைமணிநேரமா உங்களை கவனிக்க தனி நர்ஸ் போடவேண்டியதாப் போச்சுன்னு டாக்டர் சொன்னார் " என்று பெருமையாக சொன்னவளிடம்
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை , காலைலேர்ந்து சாப்பிடாததால் மயக்கம் வந்துடுச்சி", என்று கூறி அவளது நம்பாத புன்னகையில் தோற்றுப் போய் நீட்டிய அவள் கரங்களுள் முகம் புதைத்து விசும்பத் தொடங்கினேன் நான்.

வரம் - சிறுகதை

அந்திவானம் லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது. கருமேகத்திரள்கள், மற்றும் மழை வருவதற்கான குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல்.
அவசரமாக வீட்டை அடைந்த நான் வண்டியை லாக் செய்து உள்ளே நுழைந்தேன்.
வழக்கமாக வாசலுக்கு வரும் மனைவி ஆஷாவைக் காணவில்லை.
உள்ளே சிறு பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள் என் ஒருவயது மகள் சுருதி.
"செல்லம், அம்மா எங்கேடா..."
அதற்கு பதில் சொல்ல தெரியாவிட்டாலும் தாய் இருக்கும் அறையை நோக்கி ஓடியது.
உள்ளே வெறுந்தரையில் படுத்தபடி விசும்பிக்கொண்டிருந்தாள் ஆஷா.
"ஆஷா..எந்திரிம்மா.. இது என்ன வெளக்கு வைக்கிற நேரத்துல அழுதுக்கிட்டு".
அவள் என்னை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.
"உங்களால மட்டும் எப்படி இவ்வளோ கூலா இருக்க முடியுதோ, நான் சொல்றத தயவு பண்ணி கேளுங்க. என்னால இதைக் கலைக்க முடியாது. ப்ளீஸ்" கெஞ்சினாள் அவள்.
"சொன்னாக் கேளு விக்கற வெலைவாசியில ஒரு குழந்தையை வளக்குறதே பெரிய கஷ்ட்டம், இதுல இன்னொன்னு வேறயா, அதுவும் இது பொறந்த ஒண்ணரை வருஷத்துக்குள்ளே! அவசியமே இல்லை. இன்னும் ஒரு மூணுவருஷம் கழிச்சு பெத்துக்கலாம்".
"இதப்பாருங்க. குழந்தைன்றது கடவுள் கொடுக்கும் வரம். அதை அவர் கொடுக்கும்போதே ஏத்துக்கணும். நாம நெனைக்கறப்போ எல்லாம் அது கெடைக்காது" என்றாள் தீர்க்கமாக.
" அப்படிக் கெடைக்கலைன்னா கெடைக்காம போகட்டும். நமக்குதான் ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கில்ல. நமக்கு இப்போ இது வேணாம். அப்புறமா பாத்துக்கலாம். நாளைக் காலைல வேணிப்பாட்டி ஊர்ல இருந்து வர்றதா சொல்லியிருக்கா. அவ குடுக்குற பச்சிலை மருந்தை ஒருவேளை குடிச்சாலே போதும் உனக்கு ஒன்னும் வலியே தெரியாது" சற்றும் தாட்சண்யம் இல்லாமல் சொன்னேன் நான்.
அழுதுகொண்டே வெளியில் சென்றுவிட்டாள் ஆஷா.
எனக்கும் குழந்தைமேல் ஆசையில்லாமல் இல்லை. என் முதல் குழந்தை சுருதிக்காக நிறைய கோயில் குளம் ஏறி இறங்கியவன்தான் நான். அவளென்றால் எனக்கு உயிர். என்ன செய்ய. அவள் பிறந்த அடுத்த வருஷமே இன்னொரு குழந்தை என்றால் அதைத் தாங்கிக்கொள்ளும் நிலையில் என் பொருளாதாரம் இல்லை.
அதனால்தான் கிராமத்தில் பச்சிலை வைத்தியத்தில் பேர்போன என் தூரத்து சொந்தமான பாட்டியை நாளை வரச்சொல்லியிருந்தேன்.
இரவு எப்போது சாப்பிட்டு படுத்தேன் என்று நினைவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது
ஆஷாவின் அறையிலிருந்து வேணிப்பாட்டி சிரித்துக்கொண்டே வருவது தெரிந்தது. தம்பி, இனி கவலைப்பட ஒண்ணுமே இல்லை. ஆஷா வயித்தை சுத்தம் பண்ணிட்டேன். இந்தப் பச்சிலை உருண்டையை இன்னும் ஒரு வாரத்துக்கு குடு. உடம்பு தேறிடும் என்றாள் வேணிப்பாட்டி.
“சரிப்பாட்டி” என்றேன் நான்
எனக்கு மனதில் எங்கோ வலித்தது. அதற்கு நிவாரணமாக தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சுருதியைத் தூக்கினேன். குழந்தை துவண்டு விழுந்தது.
“ஐயோ , என் சுருதிக்கு என்னாச்சு? கடவுளே”. குழந்தைக்கு மூச்சு சீராக இல்லை.
உடனே அவசரமாக பக்கத்திலிருந்த மருத்துவ மனை அடைந்தேன். அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டது குழந்தை.
ஒருமணி நேரத்திற்குப் பின்
வெளியே வந்த டாக்டரை மறித்துக் கேட்டேன்.
"என்னாச்சு டாக்டர்?"
" ஐ ஆம் சாரி மிஸ்டர் நிகில். உங்க குழந்தைக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு. அது உயிரோட இருக்கப்போவது இன்னும் ஒருசிலமணி நேரம்தான். அதுக்குள்ளே சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்க"
"ஐயோ கடவுளே, நீ கொடுத்த வரத்தை மறுத்ததற்காக, ஒரு பிஞ்சை வலிய அழித்ததற்காக, எனக்கு இவ்வளோ பெரிய தண்டனையா... என் உயிரை எடுத்துக்கொள், என் குழந்தையைக் காப்பாற்று, சுருதி என்ன விட்டுப் போய்டாதே,..சுருதி.... என் கண்ணம்மா... சுருதி..."
"என்னங்க...என்னங்க..." யாரோ என் தோளைப்பிடித்து பலமாக உலுக்கவும் கண்விழித்தேன். பக்கத்தில் ஆஷா நின்றுகொண்டிருந்தாள்.
"என்னாச்சு...ஏன் அவ்ளோ பலமா கத்தனீங்க..ஏதாவது கெட்ட கனவா..?"
மலங்க மலங்க விழித்த நான் அறையைச் சுற்றிப் பார்த்தேன். சுருதி தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. ஓடிச்சென்று அள்ளிக்கொண்டேன். தூக்கம் கலைந்த சிணுங்கலிலும் 'ம்ஹீம் ...ப்பா..' என்று என்னைப்பார்த்து கன்னம் குழிய சிரித்தது.
இன்னும் என்னைக் கேள்வியாய் பார்த்தபடி நின்றிருந்த ஆஷாவைப் பார்த்தேன். நான் கண்ட கனவை விவரித்தேன்.
"கெட்ட கனவான்னு கேட்டே இல்ல, அது கெட்ட கனவில்லை. நல்ல கனவு. எனக்கு நல்ல புத்தியைக் கொடுத்த கனவு. ஆஷா..நீயும் என்னை மன்னிச்சுடு. இனி அந்த குழந்தை வேண்டாம்ன்னு சொல்லமாட்டேன். எப்படியாவது அதையும் வளத்துடுவோம். எவ்ளோ பெரிய பாவத்தை செய்ய இருந்தேன்.நல்ல வேளை கடவுள் காப்பாத்தினார்”. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான்.
என் மனமாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் சிரித்தாள் ஆஷா.
குழந்தை சுருதியும் தன் தளிர்க் கரங்களால் என்னைக் கட்டிக்கொண்டது.

வருக புத்தாண்டே!

வருக புத்தாண்டே! வருக புத்தாண்டே!

வளங்கள் பலவும் தருக புத்தாண்டே!



வான்மழை பொய்க்காது வாரித் தரவும்

வற்றிய நதிகள் கரை புரண்டு பெருகவும்

வறண்ட வயல்கள் வளம் பெறவும்

வந்தாரை வாழவைக்கும் எம் தமிழ் தேசம்

வானளாவிய வாழ்த்துக்கள் பெறவும்


வருக புத்தாண்டே! வருக புத்தாண்டே!

வளங்கள் பலவும் தருக புத்தாண்டே!

மகிழ்ச்சி

கொட்டும் பனி போல

வீசும் தென்றல் போல

பாடும் குயில் போல

என்னுடன் நீ நடந்தால்

என் மனதிற்கு மகிழ்ச்சி!


அந்தி மறையும் சூரியன் போல

நிலவில்லா வானம் போல

துளிரில்லா மரம் போல

என்னுடன் நீ இல்லையென்றால்

என் மனதிற்கு வீழ்ச்சி!

மழை வருத்தம்

கருமேகப்பெண்ணே!
உன் ஈரக் கூந்தலைத் தட்டியதால்
இங்கோ வெள்ளப் பெருக்கு
உன் கூந்தலை முடிப்பது எப்போது?
எங்கள் கவலை தீருவது எப்போது?

காதல்

நீயோ சுடுகின்றாய் ஆனால்

தீப்புண் இல்லை-வெயில்

நீயோ விழுகின்றாய் ஆனால்

காயம் இல்லை -மழை

நீயோ கொட்டுகின்றாய் ஆனால்

வலி இல்லை-பனி

நீயோ சாய்ந்துகொண்டாய் ஆனால்

சுமை இல்லை சுகம்-காதல்

துணிந்து நில்!

தோல்விகள் துரத்தும் உன்னை

துவண்டுவிடாதே, துணிந்துநில்

தூள் தூளாக உடைந்துவிடும்


வறுமை வதைக்கும் உன்னை

வாடிவிடாதே வருவதை எதிர்கொள்

வளர்ச்சி பெரும் எந்நாளும்


கொடுமைகள் குழிபறிக்கும்

குனிந்துவிடாதே கூர்மைப்படுத்து அறிவை

கொடிகட்டிப் பறக்கலாம்.

வெற்றியின் வாசல்

இதம் எனும் நான்கெழுத்தில்

இதம் எனும் சுகம் ஒளிந்திருக்கிறது

அதைப் புரிந்து கொண்டால்

இதமாய் வாழலாம் என்றும் வாழ்வினிலே.


வாழ்க்கை எனும் படகினிலே

வாகை எனும் வெற்றி ஒளிந்திருக்கிறது

அதைப் பிடித்துவிட்டால்

சுகமாய் வலம் வரலாம் என்றும் வாழ்வினிலே.


ழைப்பு எனும் உயர்வினிலே

உப்பு நீர் எனும் வியர்வை ஒளிந்திருக்கிறது.

அதை வெளியேற்ற வெளியேற்ற

பிரகாசமாய் சுடர் விடலாம் என்றும் வாழ்வினிலே.

இனிமை

ஓயாத தென்றலாய்

ஒளி கொடுக்கும் நிலவாய்

ஓங்கி நிற்கும் மலையாய்

ஒய்யார கீத மழையாய்

ஓடி விளையாடும் கடலாய்

ஒட்டிக்கொள்ளும் பசையாய்-என்மனதில்

ஒளிந்துகொண்டவளே

என்னென்று சொல்லுவேன்

எப்படிச் சொல்லுவேன்

என் இனியவளே உன்னைப்பற்றி!

இரவெல்லாம் விழித்திருந்து

பகலெல்லாம் உழைத்திருந்து

அழியாத சூரியனாய்

அழகில் நீ சந்திரனாய்

கண்ணின் மணியைப் போல

என்னை நீ காத்தாயே

என்னென்று சொல்லுவேன்

எப்படிச் சொல்லுவேன்

என் அன்பே உன்னைப்பற்றி!

Thursday 29 December 2011

செயல்

சில வேளைகளில்

வாய்ப்புக்கள் மாறலாம்

உன் வாக்கு

மாறக்கூடாது


சில வேளைகளில்

உண்மைகள் மறையலாம்

உன் உறுதி

மாறக்கூடாது


சில வேளைகளில்

காற்று திசை மாறலாம்

உன் கடமை

மாறக்கூடாது


சில வேளைகளில்

நட்புக்கள் மாறலாம்

உன் நம்பிக்கை

மாறக்கூடாது.

நினைவுகள்

மண் என்னும் உடல் கொண்டு -அதில்
இதயம் எனும் விதை கொண்டு-அதில்
செந்தளிர்கள் எனும் உன் நினைவுகளை
நான் காப்பாற்றி வளர்த்தேன்

நீயோ உன் நெருப்பு போன்ற பார்வையால்
அதனை பட்டுப் போகச் செய்யாதே
உந்தன் வறட்டு குணத்தால்
அதனை வாடிப் போகச் செய்யாதே

உன் அன்பு புன்னகையில் மட்டும்
என்னை நனைய விட்டு
உன் அரவணைப்பில் அதனை
துளிர்விடச் செய்வாயா

மாலை வெயில்

தென்றலை நான் சுவாசிக்க கடற்கரைக்குச் சென்றேன்

அதுவோ உன் சுவாசத்தில் இருக்கிறது


நறுமணத்தை நான் நுகர பூந்தோட்டம் சென்றேன்

அதுவோ உன் மேனியில் இருக்கிறது


கார்முகிலை நான் காண சிரபுஞ்சி சென்று வந்தேன்

அதுவோ உன் கூந்தலில் இருக்கிறது


நிலாவை நான் தொட்டுவிட வானுலகம் சென்று வந்தேன்

அதுவோ உன் நெற்றியில் இருக்கிறது


கோவைப்பழம் நான் கொண்டுவர கொடும் பயணம் சென்று வந்தேன்

அதுவோ உன் இதழில் இருக்கிறது


மாலை வெயில் சூரியனை மாலையிட நான் முயன்றேன்

அதுவோ என் பக்கத்திலேயே இருக்கிறது.

திருப்பம்

உன் விடியலைக் காண

விடியற்காலையில் உன்

வீட்டு வாசலில் வீழ்ந்து கிடக்கின்றேன்

நீ வருவாயா?

உன் புன்னகை காண

பூக்களை நான் மறந்து

புத்தம் புதிதாக புல்லரித்து நிற்கின்றேன்

நீ வருவாயா

உன் அழகைக் காண

இந்த அண்டமும் நான் மறந்து

ஆவலோடு காத்துக் கிடந்தேன்

நீ வருவாயா?

நீயும் வந்தாயடி

கழுத்தில் தாலியோடு

என் இதயம் சுக்குநூறாகி

திரும்பி நடந்தேனடி.

அழகிய நிகழ்வுகள்

பௌர்ணமி நிலவு

கடல் அலையை

முத்தமிட்டதால்

ஜொலிஜொலிப்பு

கடல் அலைகள்

கரையோர மணலை

முத்தமிட்டதால்

மண்ணரிப்பு

ஓங்கி வளர்ந்த தென்னை

ஓடிவரும் காற்றை

முத்தமிட்டதால்

சலசலப்பு

தென்னை ஓலையோ

வீட்டின் கூரையை

முத்தமிட்டதால்

நீங்கியது எங்களின்

வெயிலின் தகிப்பு.

தாகம்

இரவுக்கும் தாகம் உண்டு

பகலைத் தேடி

மங்கைக்கும் தாகம் உண்டு

மலரைத் தேடி

பகலவனுக்கும் தாகம் உண்டு

பனித்துளியைத் தேடி

கடலுக்கும் தாகம் உண்டு

கரையை தேடி

மேகத்துக்கும் தாகம் உண்டு

மண்ணைத் தேடி

கவிஞனுக்கும் தாகம் உண்டு

தனிமை தேடி

கவிதைக்கும் தாகம் உண்டு

ஒரு காவியம் தேடி

நீ உள்ளவரை....

உயிர் உள்ளவரை

நினைவுகள் அழிவதில்லை

உடல் உள்ளவரை

உணர்வுக்கு பஞ்சமில்லை

காதல் உள்ளவரை

காவியங்கள் குறைவதில்லை

நீ உள்ளவரை

என் வாழ்க்கையில் ஏது தொல்லை

பூக்கள்

சின்ன சின்ன பூக்கள்

சிரிப்பை உதிர்க்கும் பூக்கள்


ஒருநாள் வாழும் பூக்கள் -வாழ்வின்

உண்மை உரைக்கும் பூக்கள்


வண்டுக்குத் தேன் தரும் பூக்கள்

வாசமாய் வலம் வரும் பூக்கள்


காதலின் முதல் படி பூக்கள்-வென்றபின்

கழுத்தில் மாலையாய் விழுவதும பூக்கள்


பூஜையில் இருப்பதும் பூக்கள்

பூமியின் தேவதைகள் பூக்கள்


மனதை கொள்ளை கொள்ளும் பூக்கள்

மங்கையின் கூந்தலிலும் பூக்கள்


வாய் பேசாத பூக்கள் ஏழையின்

வறுமை தீர விற்றுத் தீரும் பூக்கள்

அன்னையைப் போல

விடியலை மறந்த எனக்கு

உன் முகம் தான் விடியலடி

சோதனைகள் நிறைந்த எனக்கு

சாதனையாய் நீ வந்தாயடி

பட்டுப்போன என் உள்ளத்தில்

பனித்துளியாய் நீ விழுந்தாயடி

துக்கம் அலைபாயும் என் மனதில்

தூக்கம் அமைதியாய் நிறைந்தாயடி

அனாதையாய் இருந்த எனக்கு

அன்னை போல் நீயும் அமைந்தாயடி.

ரசனை

ஆடி வரும் கடல் அலை ரசித்தேன்

ஓடி வரும் மேகங்கள் ரசித்தேன்

பூமியில் விழும் மழைத்துளி ரசித்தேன்

பூத்துக் குலுங்கும் மலர்களை ரசித்தேன்

காலையில் உதிக்கும் கதிரவன் ரசித்தேன்

மாலையில் பறக்கும் பறவைகள் ரசித்தேன்

பசுமையான வயல்வெளி ரசித்தேன்

பாய்ந்து ஓடும் நதியினை ரசித்தேன்

தோகை விரிக்கும் மயிலை ரசித்தேன்

அழகாய் பாடும் குயிலை ரசித்தேன்

நீ உள்ளதால் இந்த உலகையே ரசித்தேன்

நீ கனவில் வருவதால் உறக்கம் ரசித்தேன்

ஊக்கம்

நாம் சிரிப்போம் சிந்திப்போம்

சிறுமை வேண்டாம் நம்மிடையே

மறப்போம் மன்னிப்போம்

மன்றாடி நிற்க வேண்டாம் எவரிடத்திலும்

உழைப்போம் உயர்வோம்

உறுதி மனப்பன்மை வேண்டும்

கல்வி வளர்ப்போம் கலை வளர்ப்போம்

கன்னித்தமிழ் மறவாதிருப்போம்

புதுமை செய்வோம் ஓர் புரட்சி செய்வோம்

பிறந்த மண்ணை மறவாதிருப்போம்

கவிதை படைப்போம் பல காவியம் படைப்போம்

கடல் அலையாய் என்றும் இருப்போம்

உழைப்பாளி

உழைக்கத் தெரிந்தவனுக்கு
உயர்வடையத் தெரியவில்லை

மூட்டைகளைத் தூக்குகிறான்
முன்னுக்கு வருவதில்லை

சேரும் பணத்தை
சேமிக்கத் தெரியவில்லை

குடிக்கசெலவிடும் பணத்தை
குடும்பத்துக்கு கொடுப்பதில்லை

பீடிக்குப் பஞ்சமில்லை
பிள்ளைக்கும் பஞ்சமில்லை

மனைவிக்கும் பஞ்சமில்லை-சமூகத்தில்
மரியாதை சிறிதும் இல்லை

பிழைக்க வழியில்லை
பிள்ளை ஒருபக்கம்

மனைவி ஒரு பக்கம்
மருகி நிற்கின்றான் அவன் வாழ்க்கை
மலர்வது எப்போது?

பிரிவின் துன்பம்

அன்பை ஊட்டி வளர்த்த
அன்னையே உன் பிரிவால் நான்
அடிமையாய் கிடக்கின்றேன்
அனாதையாய் இருக்கின்றேன்
ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை
அல்லல் படுகின்றேன்
ஆறுகள் நிரம்பி ஓடினால்
அணைபோட்டு தடுப்பதைப்போல் நான்
ஆத்திரம் கொண்டாலும் நீ
அன்புமழை பொழிந்திடுவாய்
ஆருயிர் அன்னையே உன்
ஆத்மாவை எனக்கு விட்டுச் சென்றாய்
அன்பின் அர்த்தம் அன்னையே நீ
அருகில் இருந்த போது உன்
அருமை தெரியவில்லை நீ
மறைந்த பின் தான் உன்
மாண்பு தெரிகிறது
மண்டியிட்டுக் கேட்கிறேன் என்
மகளாய் நீ பிறப்பாயா?

வாழ்வில் உயர.

ஆசை எனும் தீயை அணைத்து
ஆமை போன்ற உழைப்பை துரிதப்படுத்தி
அடிமை எனும் சங்கிலியை உடைத்தெறிந்து
அன்பு எனும் பாசவலை கொண்டால்
அகிலம் வணங்கும் உன்னை
இறுமாப்பு எனும் மனத்திரையை விலக்கி
இதயம் எனும் கோயில் கட்டி அதில்
உண்மை எனும் திரி போட்டு
உழைப்பு எனும் தீபம் ஏற்றினால்
உலகம் மதிக்கும் உன்னை
உயர்வடையலாம் உன் வாழ்வில்

ஒரு.... கல்.....!

பாத்திரத்தில் உள்ள ஒரு கல்
நிக்கல்
தொண்டையை வறட்டும் ஒரு கல்
விக்கல்
வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு கல்
சிக்கல்
வார்த்தையில் உதிரும் ஒரு கல்
நக்கல்
வலியோர் எளியோரிடம் காட்டும் ஒரு கல்
ஒதுக்கல்
காதலி காதலனிடம் செய்யும் ஒரு கல்
சிணுங்கல்
மாதக்கடைசியில்
மனைவி கணவனிடம் காண்பிக்கும் ஒரு கல்
முனகல்(பிக்கல்)

தெய்வீகக் காதல்

காதல் கண்ணாடிதான்
உடைந்துவிட்டால் ஒட்டமுடியாது
காதல் கடல் அலை தான்
யாராலும் நிறுத்திவிட முடியாது
காதல் நிலவொளிதான்
எவராலும் அழித்துவிட முடியாது
காதல் தெய்வீகம்
ஒருவராலும் களங்கப்படுத்த முடியாது

களைப்பும் களிப்பும்

ஏற்றம் பிடித்த கையால்

ஏர் உழுத களைப்பால்

அலுப்புடன் காத்திருந்தேன்

அவள் வருகையை நோக்கி


வயல்வெளி ஓரத்தில்

அன்னம்போல் நடந்து

அன்னக்கூடையுடன்

அழகுடனே அவள் வந்தாள்


கொஞ்சிப்பேசவில்லை

கெஞ்சியது வயிறு

கொஞ்சம் பருகினேன்

கொண்டுவந்த கஞ்சியை


முத்துக்கள் என் நெற்றியிலே

முந்தானையால் துடைத்தாள்

முத்துப்பல் தெரியும் முறுவலில்

முழுநிலவாய் தெரிந்தாள்

ஆசை கடலலை

ஆசை
கடலலை போன்றது
எப்போதும் ஓயாது
அடித்துக் கொண்டே இருக்கும்
இன்பம்
மலரைப் போன்றது
ஒருநாள் மட்டுமே வாழ்ந்துவிட்டு
வாடி மறைந்துபோகும்
அன்பு
குறிஞ்சி மலரைப் போன்றது
எப்போதாவது பூத்து உனைத்
தழுவி சென்றுவிடும்
துன்பம்
சூரியனைப் போன்றது
எப்போதும் உன்னை
சுட்டுக் கொண்டே இருக்கும்
பொய்
கானல் நீரைப் போன்றது
அருகில் செல்லச் செல்ல
மறைந்து போவதுதான் மிச்சம்.
இல்வாழ்க்கை
தண்டவாளம் போன்றது
இணைந்து சென்றால்தான் லட்சியம்
எனும் இடத்தை அடைய முடியும்

அழகின் அழகு

பச்சை நிற மூங்கில் மேல்
பாடித்திரிந்த பைங்கிளியே அவள்
பைந்தமிழ் மொழி கேட்டு நீ
பேச மறந்தாயோ

வண்ண மலர்களை தேடி
பறந்து திரியும் கருவண்டே
அவள் பாதம் கண்டு வெண் மலரோ என்று
தேனெடுக்க தொடர்ந்தாயோ

பச்சை புல்விழி மீது
படுத்துறங்கும் பனிநீரே
அவள் வரவு கண்டு
ஆதவனோ என்று நீ ஓடி ஒளிந்தாயோ

இன்றைய சூழல்

வாய்மை வெல்லும் வாய்மை வெல்லும் என்று

வாய் கிழிய கத்தினேன்-இன்றைய சூழலில்

என் வாய் வலித்ததுதான் மிச்சம்


அச்சமில்லை அச்சமில்லை என

அறைகூவல் விடுத்தேன்-இன்றைய சூழலில்

நான் அடங்கிப் போனதுதான் மிச்சம்


மடமை வேண்டாம் மடமை வேண்டாமென

மன்றாடி நின்றேன் -இன்றைய சூழலில்

நான் மல்லுக்கட்டியதுதான் மிச்சம்


ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் என

ஞாயிறாய் சுற்றினேன் -இன்றைய சூழலில்

நான் நானாகவே இருந்தால் போதுமென புரிந்தேன்

காதல் தோல்வி

உனக்காக பறித்த புது மலர்
அதன் இதழ்கள் வாடும் முன்பே
என் இதயம் வாடிவிட்டது

காலை உதிக்கும் சூரியன்
வானின் உச்சிக்கு வரும் முன்
என் இதயம் சுட்டுப்பட்டு விட்டது

டக் டக் என்ற கடிகாரத்தின் ஓசை
நிற்பதற்கு முன்னரே என்
இதய ஓசை நின்றுவிட்டது

திரண்ட கருமேகம் ஒன்றாகி
மழை வரும் முன்பே என்
இதய வானம் இருண்டு விட்டது

கடல் அலை கரையை முத்தமிடு முன்பே
என் உடல் சரிந்து மண்ணை முத்தமிட்டது
இவையெல்லாம் ஏன் தெரியுமா
நீ என்னை I hate you என்றதால்

குப்பைத்தொட்டிக் குழந்தை

குப்பைத் தொட்டியில் விழுந்தேனடா
அதுவே குடில் என்று ஆனதடா
குவா..குவா என்ற என் சத்தத்தை
குனிந்து பார்ப்பதற்கும் ஆள் இல்லையடா

நாய்களுக்கும் கழுகுகளுக்கும்
நல்ல வேட்டையாடா
ஊரின் பெயர் என்னவோ
நல்லதோர் பேட்டையடா

தாள முடியாமல் தத்தளித்தேன்
வெயில் சூட்டையடா
மேலே வந்து விழவில்லையே
ஒரு சட்டையடா

தவழும் வயதில் தாய்ப்பால் இல்லையடா
தத்தித் தத்தி நடந்தபோது
தங்கிக் கொள்ளவும் ஆளில்லையடா
தரம் கெட்ட உலகத்தில் தன்னந்தனியாய் ஆனேனடா

பள்ளிப் படிப்பு இல்லையடா
பாசம் நேசம் கஷ்ட்டமடா
பாவப்பட்ட ஜென்மமடா
நான் பரதேசி ஆனேனடா

மனசுக்குள் வந்தவளே...!

பாதையில் பதிந்திருக்கும் உன்
பாதச் சுவடுகளை
பார்த்தால் பாவலனுக்கு
பாடல் எழுத தோன்றுமடி

கண்களை தொட்டு செல்லும் உன்
கார்குழல் கேசம் கண்டால்
கன்னி உன் அழகை
கவி எழுத தூண்டுமடி

சிறு மலராய் விரிந்த உன்
சிங்கார வதனத்தின்
சிரிப்பைக் கண்டால் சிற்பிக்கும்
சிலை வடிக்கத் தோன்றுமடி

மாசு மறுவற்ற உன்
மழலை உள்ளத்தை கண்டால்
மங்கை உன்னை என்
மனதில் குடியேற்றத் தோன்றுதடி

அழகு மழலையே!

வானத்து வெண்ணிலவே
நீ பிறந்தாய்
தவழும் பெண்ணிலவாய்

ஒரு கோடி விண்மீன்களில்
நீ பிறந்தாய்
ஒளிவீசும் சூரியனாய்

துன்பமெனும் துயர் துடைக்க
நீ பிறந்தாய்
தூய விடிவெள்ளியாய்

வாடா நறுமலராய்
நீ பிறந்தாய்
வாழ்கை எனும் பூந்தோட்டத்தில்

ஆனந்த வெள்ளமாய்
நீ எங்களை ஆட்கொண்டாய்
அழகு மழலையே!

தமிழன்

தமிழன் என்பதால்
உணர்வுகளை
உதாசீனப்படுத்துகின்றனர்

தமிழன் என்பதால்
நட்பைக்கூட
நசுக்கி விடுகின்றனர்

தமிழன் என்பதால்
ஒற்றுமையை இல்லாமல்
ஒடுக்கி விடுகின்றனர்

தமிழன் என்பதால்
தலை நிமிர்த்தாவண்ணம்
தட்டி விடுகின்றனர்

தமிழன் என்பதால்
கேளிக்கைப் பேச்சாக்கி
கேவலப் படுத்துகின்றனர்

தமிழன் என்பதால் - தாய்
மண்ணில் கூட வாழ விடாமல்
மிதித்து விடுகின்றனர்

என்னவளே

என்னவளே
பெண்களை நிலவு என்கிறார்கள்
நான் மட்டும் உன்னை
சூரியன் என்கிறேன்
ஏன் தெரியுமா
நிலவென்றால் மாதத்தில்
பாதிநாள் தேய்ந்து விடும்
நிலவின் ஒளி இரவல்
சூரியனோ தேய்வதில்லை
சுயமாக ஒளிருகிறது
நெருப்பாக மிளிருகிறது
நீயும் அப்படித்தான்
தானாக அழகொளி வீசும் தேவதையே
தகாதவர்களை சுட்டெரிக்கும் நெருப்பே
எனக்கு மட்டும் உன் வெப்பத்தை நீக்கி
என்றும் உன் ஒளியை தருவாயா?

தந்தையும் மகனும்

விளக்கு எனும் தேகம் பூண்டு அதில்
தசை நரம்பு எனும்
பாசக்யிறுகளை திரியாக்கி
உழைப்பு எனும்
குருதி எண்ணையில் நனையவிட்டு
சுடர் எனும் இன்ப வெள்ளத்தை
குறையாமல் கொடுத்துவந்தான்
தந்தை தன் ஆசை பிள்ளைக்கு

பிள்ளையோ சம்சாரம் எனும்
மின்சாரம் கொண்டு
பித்தம் எனும்
பிளக் பாயின்ட் மாட்டி
கொடுமை எனும்
குழல் பல்புகளை தொங்கவிட்டு
கூலாக உலா வந்தான்
விளக்கான தந்தையை
ஊதித் தள்ளிவிட்டு.

Tuesday 27 December 2011

கனவு கண்டேன்

கனவு கண்டேன் -நான்
கனவுகண்டேன்  அந்த
கனவில் ஓர் புதுமை
காட்சி கண்டேன்

தமிழகம் எங்கள் தேசம்  அன்னைத்
தமிழ்மொழி எங்கள் சுவாசம்  
வந்தோரை வாழவைத்த எங்கள்
வளமை மிகு தமிழ்த்திரு நாட்டில்

அன்பு பண்பு மலர்ந்திருக்கும்
அறிவும் அழகும் நிறைந்திருக்கும்
அன்னையை என்றும் மதித்திருக்கும் எங்கள்
அன்புத் தமிழ்த்திரு நாட்டில்

கடமை என்றும் தவறாமல்
கருணை என்றும் குறையாமல்
கடலைப் போல விரிந்திருக்கும் எங்கள்
கன்னித்  தமிழ்த்திரு நாட்டில்  

போட்டிகள் ஏதுமில்லை
பொறாமை வந்ததில்லை
பெரியோரைப் போற்றும் எங்கள்
பொன்னிகர் தமிழ்த்திரு நாட்டில்


நீருக்காக சண்டையில்லை
நித்தம் விளைச்சலுக்குப் குறைவில்லை  
நிம்மதிக்குப் பஞ்சமில்லை என்று வாழும்
நிலைமை எம் மக்களுக்கு நிலைக்கும் என் கனவு
நிஜமாகும் நாள் எந்நாளோ

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...