Friday 30 December 2011

கல்மனசு - சிறுகதை

"தேவையானதை எல்லாம் கரெக்டா எடுத்து வச்சுக்கோம்மா, அப்புறம் அங்க போன பிறகு அது இல்லை இது இல்லன்னு சொல்லக்கூடாது". பேக் பண்ணிக் கொண்டிருந்த அம்மாவிடம் எச்சரித்துவிட்டு
"எங்கே இந்த மீனாவைக் காணோம்" என்றபடி உள்ளே நுழைந்தேன் நான்
"இங்கே தான் இருக்கேங்க" பூஜை அறையிலிருந்து தீனமாக குரல் கேட்டது.
"இன்னும் பூஜை முடியல்லியா? மதியம் ஒரு மணிக்கு அட்மிஷன். நீயானா இன்னும் பூஜையிலேயே உக்கார்ந்துக்கிட்டு இரு" கத்தினேன் நான்.
"என்னங்க ..எனக்கு ரொம்ப பயமா இருக்கு . சிசேரியன் ன்னா ரொம்ப வலிக்குமா?"குழந்தை போல் கேட்டுக்கொண்டு வந்தவளைக் கோபத்துடன் ஏறிட்டேன் நான்.
"ஊருல உலகத்துல யாருமே குழந்தையே பெத்துக்கறதில்லையா? என்னமோ நீதான் ரொம்ப அலட்டிகறே? ரண்டு நாளா இதே தொணதொணப்பு. தாங்கலைடா சாமி. இப்போ நீ ரெடியாகப் போறியா இல்லையா?" நான் போட்ட அதட்டலில் பயத்தை மறைத்தபடி தயாராகத் தொடங்கினாள் மீனா.
எனக்குமே உள்ளூர பயம்தான். இது தலைப் பிரசவம். மறுபிறவி என்பார்களே அதைப்போல. ஆனால் என் பயத்தை வெளியில் காட்டிக் கொண்டால் ஏற்கனவே பயந்து போயிருக்கும் அவள் இன்னும் பயந்துவிடுவாள் என்பதால் கோபம் போலவே நடித்துக் கொண்டிருக்கிறேன். அவள் உள்ளே சென்றதும் பூஜையறைக்குள் சென்று "பகவானே என் மீனாவை நல்லபடியாய் எனக்குத் திருப்பிக்கொடு" என்று வேண்டிக்கொண்டேன் அவளுக்குத் தெரியாமல்.
மருத்துவமனை.
மீனாவை ரெடிபண்ணி கொண்டிருந்தனர் செவிலியர்.
டாக்டரிடம் பேசிவிட்டு வந்தேன் நான்.
"என்னங்க டாக்டர் என்ன சொல்றாங்க?"
"எல்லாம் முன்னமே சொன்னதுதான். ஒருமணிக்கு சிசேரியன். ரண்டு மணிக்கெல்லாம் முடிஞ்சுடும், ஒண்ணும் பிரச்சனை இல்லை"
"என்னங்க மயக்கம் குடுத்து தானே செய்வாங்க. ஒருவேளை மயக்கம் தெளிஞ்சதும் வலிக்குமா?"
"இந்த மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தா நா நேரா வீட்டுக்குப் போய்டுவேன். நீ எப்படியாவது போ."
"ச்சே ..என்ன இருந்தாலும் கொஞ்சமாவது எம்மேல உங்களுக்கு பாசம் இருக்கா. சரியான கல்மனசு. "
"சரி சரி அப்படியே வச்சுக்கோ" நான் சொல்லி முடிப்பதற்குள் அவளது அம்மா மற்றும் உறவினர்கள் வந்துவிட அவர்களுடன் ஐக்கியமானாள்.
நான் எப்பவுமே இப்படித்தான். உலகிலேயே நான் அதிகம் நேசிப்பது அவளைத்தான் என்றாலும் காட்டிக்கொள்ளவே மாட்டேன்.எதையும் அவள் பத்து தடவைக் கேட்டால்தான் செய்வேன் . இதனால் நான் அவளை வெறுப்பதாகவே தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். இருக்கட்டும்.
டாக்டர் சில பேப்பர்களில் கையொப்பம் வாங்கினார். படிக்கும்போதே மனது வலித்தது. இந்த அறுவை சிகிச்சையில் எதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால்...?ஐயோ கடவுளே அப்படி எதுவும் நேர்ந்துவிடக் கூடாது.வேண்டியபடி வெளியில் நின்றிருந்தேன்.
"ஜீவா நீ போய் சாப்பிட்டு வந்துடு.இங்கே நான் பாத்துக்கறேன்". மாமனார் சொன்னது காதிலேயே விழவில்லை.
"ஜீவா காலைலேர்ந்து ஒண்ணுமே சாப்பிடலியே இந்த பாலையாவது குடியேன்" என்ற தாயின் வார்த்தைகளுக்கு தலையசைவால் மறுப்பு சொல்லிவிட்டு வாயிலையே வெறித்தபடி நின்றிருந்தேன்.
"மாமா , அரைமணி நேரம்னு சொன்னாங்க இப்போ முக்கால்மணி நேரம் ஆகுது? என்னன்னு தெரியலையே?"பதறினேன் அவர் சொன்ன மறுமொழிகூட காதில் விழவில்லை.
"இந்தாங்க ,மீனான்ற பேஷண்டோட அட்டெண்டர் யாரு"?
"நான்தான் என்னாச்சு டாக்டர்?"
"கொஞ்சம் சீரியசான கேஸ்தான் , குழந்தை பொசிஷன் மாறியிருக்கு. சிசேரியன்ல ஏதோ ஒரு உயிர்தான் பிழைக்க முடியம்."
டாக்டர் முடிப்பதற்குள் " டாக்டர் என் மீனாவை காப்பாத்துங்க ப்ளீஸ்” என்று கதறியபடி மயங்கிவிழுந்தேன் நான்.
எவ்வளோ நேரமானதோ தெரியவில்லை.
"ஜீவா ..இப்போ எப்படி இருக்கீங்க..." டாக்டரின் கேள்விக்கு புரியாமல் விழித்தபடி என்னாச்சு டாக்டர்? மீனா எங்கே" என்ற என் காதுகளில் இனிதாக குழந்தையின் அழுகுரல் கேட்டது.
பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்ற டாக்டர் "பாத்தீங்களா உங்களுக்கு பொண்ணு பெறந்திருக்கா. கடவுள் புண்ணியத்துல உங்க மீனாவுக்கும் ஆபத்தில்லை”.
டாக்டர் வெளியேறியபின்
"ஆமா எம் மேல இவ்வளோ பாசமா வச்சிருப்பீங்க? எனக்கு ஒரு ஆபத்துன்னா எனக்கு முன்னாடி நீங்க போய் சேந்துடுவீங்க போலருக்கு? அரைமணிநேரமா உங்களை கவனிக்க தனி நர்ஸ் போடவேண்டியதாப் போச்சுன்னு டாக்டர் சொன்னார் " என்று பெருமையாக சொன்னவளிடம்
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை , காலைலேர்ந்து சாப்பிடாததால் மயக்கம் வந்துடுச்சி", என்று கூறி அவளது நம்பாத புன்னகையில் தோற்றுப் போய் நீட்டிய அவள் கரங்களுள் முகம் புதைத்து விசும்பத் தொடங்கினேன் நான்.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...