Friday 30 December 2011

வரம் - சிறுகதை

அந்திவானம் லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது. கருமேகத்திரள்கள், மற்றும் மழை வருவதற்கான குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல்.
அவசரமாக வீட்டை அடைந்த நான் வண்டியை லாக் செய்து உள்ளே நுழைந்தேன்.
வழக்கமாக வாசலுக்கு வரும் மனைவி ஆஷாவைக் காணவில்லை.
உள்ளே சிறு பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள் என் ஒருவயது மகள் சுருதி.
"செல்லம், அம்மா எங்கேடா..."
அதற்கு பதில் சொல்ல தெரியாவிட்டாலும் தாய் இருக்கும் அறையை நோக்கி ஓடியது.
உள்ளே வெறுந்தரையில் படுத்தபடி விசும்பிக்கொண்டிருந்தாள் ஆஷா.
"ஆஷா..எந்திரிம்மா.. இது என்ன வெளக்கு வைக்கிற நேரத்துல அழுதுக்கிட்டு".
அவள் என்னை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.
"உங்களால மட்டும் எப்படி இவ்வளோ கூலா இருக்க முடியுதோ, நான் சொல்றத தயவு பண்ணி கேளுங்க. என்னால இதைக் கலைக்க முடியாது. ப்ளீஸ்" கெஞ்சினாள் அவள்.
"சொன்னாக் கேளு விக்கற வெலைவாசியில ஒரு குழந்தையை வளக்குறதே பெரிய கஷ்ட்டம், இதுல இன்னொன்னு வேறயா, அதுவும் இது பொறந்த ஒண்ணரை வருஷத்துக்குள்ளே! அவசியமே இல்லை. இன்னும் ஒரு மூணுவருஷம் கழிச்சு பெத்துக்கலாம்".
"இதப்பாருங்க. குழந்தைன்றது கடவுள் கொடுக்கும் வரம். அதை அவர் கொடுக்கும்போதே ஏத்துக்கணும். நாம நெனைக்கறப்போ எல்லாம் அது கெடைக்காது" என்றாள் தீர்க்கமாக.
" அப்படிக் கெடைக்கலைன்னா கெடைக்காம போகட்டும். நமக்குதான் ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கில்ல. நமக்கு இப்போ இது வேணாம். அப்புறமா பாத்துக்கலாம். நாளைக் காலைல வேணிப்பாட்டி ஊர்ல இருந்து வர்றதா சொல்லியிருக்கா. அவ குடுக்குற பச்சிலை மருந்தை ஒருவேளை குடிச்சாலே போதும் உனக்கு ஒன்னும் வலியே தெரியாது" சற்றும் தாட்சண்யம் இல்லாமல் சொன்னேன் நான்.
அழுதுகொண்டே வெளியில் சென்றுவிட்டாள் ஆஷா.
எனக்கும் குழந்தைமேல் ஆசையில்லாமல் இல்லை. என் முதல் குழந்தை சுருதிக்காக நிறைய கோயில் குளம் ஏறி இறங்கியவன்தான் நான். அவளென்றால் எனக்கு உயிர். என்ன செய்ய. அவள் பிறந்த அடுத்த வருஷமே இன்னொரு குழந்தை என்றால் அதைத் தாங்கிக்கொள்ளும் நிலையில் என் பொருளாதாரம் இல்லை.
அதனால்தான் கிராமத்தில் பச்சிலை வைத்தியத்தில் பேர்போன என் தூரத்து சொந்தமான பாட்டியை நாளை வரச்சொல்லியிருந்தேன்.
இரவு எப்போது சாப்பிட்டு படுத்தேன் என்று நினைவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது
ஆஷாவின் அறையிலிருந்து வேணிப்பாட்டி சிரித்துக்கொண்டே வருவது தெரிந்தது. தம்பி, இனி கவலைப்பட ஒண்ணுமே இல்லை. ஆஷா வயித்தை சுத்தம் பண்ணிட்டேன். இந்தப் பச்சிலை உருண்டையை இன்னும் ஒரு வாரத்துக்கு குடு. உடம்பு தேறிடும் என்றாள் வேணிப்பாட்டி.
“சரிப்பாட்டி” என்றேன் நான்
எனக்கு மனதில் எங்கோ வலித்தது. அதற்கு நிவாரணமாக தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சுருதியைத் தூக்கினேன். குழந்தை துவண்டு விழுந்தது.
“ஐயோ , என் சுருதிக்கு என்னாச்சு? கடவுளே”. குழந்தைக்கு மூச்சு சீராக இல்லை.
உடனே அவசரமாக பக்கத்திலிருந்த மருத்துவ மனை அடைந்தேன். அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டது குழந்தை.
ஒருமணி நேரத்திற்குப் பின்
வெளியே வந்த டாக்டரை மறித்துக் கேட்டேன்.
"என்னாச்சு டாக்டர்?"
" ஐ ஆம் சாரி மிஸ்டர் நிகில். உங்க குழந்தைக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு. அது உயிரோட இருக்கப்போவது இன்னும் ஒருசிலமணி நேரம்தான். அதுக்குள்ளே சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்க"
"ஐயோ கடவுளே, நீ கொடுத்த வரத்தை மறுத்ததற்காக, ஒரு பிஞ்சை வலிய அழித்ததற்காக, எனக்கு இவ்வளோ பெரிய தண்டனையா... என் உயிரை எடுத்துக்கொள், என் குழந்தையைக் காப்பாற்று, சுருதி என்ன விட்டுப் போய்டாதே,..சுருதி.... என் கண்ணம்மா... சுருதி..."
"என்னங்க...என்னங்க..." யாரோ என் தோளைப்பிடித்து பலமாக உலுக்கவும் கண்விழித்தேன். பக்கத்தில் ஆஷா நின்றுகொண்டிருந்தாள்.
"என்னாச்சு...ஏன் அவ்ளோ பலமா கத்தனீங்க..ஏதாவது கெட்ட கனவா..?"
மலங்க மலங்க விழித்த நான் அறையைச் சுற்றிப் பார்த்தேன். சுருதி தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. ஓடிச்சென்று அள்ளிக்கொண்டேன். தூக்கம் கலைந்த சிணுங்கலிலும் 'ம்ஹீம் ...ப்பா..' என்று என்னைப்பார்த்து கன்னம் குழிய சிரித்தது.
இன்னும் என்னைக் கேள்வியாய் பார்த்தபடி நின்றிருந்த ஆஷாவைப் பார்த்தேன். நான் கண்ட கனவை விவரித்தேன்.
"கெட்ட கனவான்னு கேட்டே இல்ல, அது கெட்ட கனவில்லை. நல்ல கனவு. எனக்கு நல்ல புத்தியைக் கொடுத்த கனவு. ஆஷா..நீயும் என்னை மன்னிச்சுடு. இனி அந்த குழந்தை வேண்டாம்ன்னு சொல்லமாட்டேன். எப்படியாவது அதையும் வளத்துடுவோம். எவ்ளோ பெரிய பாவத்தை செய்ய இருந்தேன்.நல்ல வேளை கடவுள் காப்பாத்தினார்”. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான்.
என் மனமாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் சிரித்தாள் ஆஷா.
குழந்தை சுருதியும் தன் தளிர்க் கரங்களால் என்னைக் கட்டிக்கொண்டது.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...